Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் - சென்னை திரும்புவதை 2, 3 நாள் தவிர்க்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கனமழை மற்றும் ஏரிகள், அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ள பொதுமக்கள் 2, 3 நாட்கள் கழித்து சென்னை திரும்பவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 44 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. கோவை, திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவீதத்துக்கும் மேலாக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. மழைநீர்தேங்கியுள்ள மாநகராட்சிப் பகுதிகளில் ராட்சத பம்புகளை கொண்டு நீர் வெளியேற்றப்படுகிறது. சுமார் 500 இடங்களில் இந்த பம்புகள் பொருத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் 160 நிவாரண முகாம்களில் இதுவரை 44 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 50 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.

மழையால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள், குழிகளை சரிசெய்ய மின்துறைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் அறிவுறுத்தியுள்ளேன். தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையும் தயார் நிலையில் உள்ளது. மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மழை நீர் தேங்கிய பல பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்காத வகையில் வருவாய், உள்ளாட்சி, பொதுப்பணித் துறை மூலம் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டுள்ளேன். அனைத்து இடங்களிலும் உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதையும், கரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகள் தவறாமல் கடைபிடிக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். கட்டணமில்லா தொலைபேசி 1070 மூலம் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள ஏரிகள், அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ள பொதுமக்கள் 2, 3 நாட்கள் கழித்து சென்னை திரும்ப வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

சென்னையில் மின்சாரம், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளின் அலுவலங்கள் தவிர, மற்ற துறைகளுக்கு இன்று விடுப்பு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தனியார் நிறுவனங்களும் மழை நிலவரத்துக்கு ஏற்ப தங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுப்பு அல்லது வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x