Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

டெங்கு காய்ச்சல் எதிரொலி - 9 மாநிலங்களுக்கு விரைந்த மத்திய குழு :

டெங்கு காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக 9 மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரஅமைச்சகத்தைச் சேர்ந்த உயர்நிலைக் குழுவினர் விரைந்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. ஹரியாணா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஜம்மு-காஷ்மீர்ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து டெங்கு நோயைக் கட்டுப்படுத்தவும் அது சார்ந்த செயல்முறைகளை நிர்வகிக்கவும் பொது சுகாதார நடவடிக்கைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ, மத்திய அரசு நேற்று சுகாதாரத்துறையின் உயர்நிலைக் குழுக்களை டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கடந்த 1-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்தே இந்தக் குழுக்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு அதிகரிப்பு

கடந்த அக்டோபரில் இந்த 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த குழுக்களில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய திட்டத்தின் அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமாகவுள்ளது. நன்னீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள், பகலில் மனிதர்களை கடித்து டெங்குவை பரப்புகின்றன. டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவரை கடிக்கும் கொசுக்களால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவும் அபாயமும் உள்ளது.

சாதாரண காய்ச்சல் போல் இல்லாமல், தலைவலி, உடல்வலி, கண்ணுக்கு பின்புறம், எலும்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வலியை ஏற்படுத்தும். இதை உணர்வோர் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலமே பெரும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்என்று சுகாதாரத்துறை அறிவுறுத் தியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x