Published : 03 Nov 2021 03:11 AM
Last Updated : 03 Nov 2021 03:11 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - தொடர் மழையால் 283 ஏரிகள் நிரம்பின :

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றரை மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையால், நீர்நிலைகள் கிடுகிடுவென நிரம் பியது. அணைகள் மற்றும் ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் ஆறுகள், பாசனக் கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் நீரோட்டத்தை காண முடிகிறது.

இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியதும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தி.மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் மேலும் தீவிர மடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக, இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தி.மலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 697 ஏரிகள் உள்ளன. இதில், 171 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிகிறது. மேலும், 81 ஏரிகள் 75 சதவீதமும், 78 ஏரிகள் 50 சதவீதமும் மற்றும் 249 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பின. இதேபோல் 118 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாக நிரம்பி உள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 1,286 ஏரிகள் உள்ளன. இதில், 112 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. மேலும், 81 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை 85 ஏரிகளும், 71 முதல் 80 சதவீதம் வரை 130 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை 286 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 437 ஏரிகளும், 25 சதவீதத்துக்கு குறைவாக 236 ஏரிகளும் நிரம்பி உள்ளன.

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப் பாட்டில் உள்ள 1,983 ஏரிகளில் 283 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டியுள்ளன.

இது குறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறும் போது, “பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், ஏரிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். பலவீனமாக இருந்த கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது” என்றனர்.

அதேநேரத்தில் விவசாயி கள் கூறும்போது, “குடிமராமத்து பணிகளை முழுமையாக செய்யவில்லை. ஏரிகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. பல ஏரிகள் தூர்ந்து கிடப்பதால், அதிகபட்சம் 70 முதல் 80 சதவீத அளவுக்கு மட்டுமே தண்ணீரை சேமிக்கும் நிலை உள்ளது. 20 சதவீத தண்ணீர் வெளியேறுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x