Published : 31 Oct 2021 03:08 AM
Last Updated : 31 Oct 2021 03:08 AM

நவ.1-ம் தேதிதான் தமிழ்நாடு நாள் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து : முதல்வர் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை

நவம்பர் 1-ம் தேதிதான் தமிழ்நாடு நாள். பெயர் சூட்டப்பட்ட நாள், பிறந்த நாள் அல்ல என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற 110 பேருக்கு ரூ.1லட்சம் பொற்கிழி வழங்கப்படும்என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிதுள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரம், தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளே தவிர, தமிழ்நாடு நாள் அல்ல என்றும், 1967-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனபெயர் சூட்டக்கோரும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ம் தேதிதான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் எனவும் முதல்வர் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டப்பட்ட நாளை, தமிழ்நாடு நாள் எனக் கொண்டாட முடியாது. இன்றைய தமிழகத்தின் எல்லைப் பரப்பு உறுதி செய்யப்பட்ட நவம்பர் 1-ம் தேதிதான் தமிழ்நாடு நாளாகும். இதை மாற்ற முடியாது.

2019-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, நவம்பர் 1-ம் தேதிதமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதை எவரும் எதிர்க்கவில்லை. கடந்தஆண்டு தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டபோது, அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். எனவே, நவம்பர் 1-ம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும்.

தலைவர்கள் வரவேற்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: கடந்த 1967 ஜூலை18-ம் தேதி சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த நாளை தமிழ்நாடு நாளாக அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதல்வரும் சிந்தித்து அந்த நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் இரா.முத்தரசன்: தமிழகம், மொழிவாரி மாநிலமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பநிலையில் இருந்தே முன்னெடுத்தது. மேலும், இதற்காக நடைபெற்ற போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. தியாகி சங்கரலிங்கனார், `மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடுஎன சூட்ட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து, உயிர்நீத்தார். அவருக்கு இந்நாளில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.

தமிழ்நாடு பிறந்த நாளை, சாதி, மதம், அரசியல் நிலைகளைக் கடந்து, அனைவரும் இன்பத் திருநாளாக கொண்டாடும் இந்நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x