Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் - சசிகலாவை சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் கூறியது சரிதான் : அதிமுக அமைப்புச் செயலர் ஜே.சி.டி.பிரபாகர் கருத்து

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து சரிதான் என்றுஅக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் மூத்த தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா என்று தனிப்பெரும் ஆளுமையின்கீழ் கட்டுக்கோப்புடன் இருந்த அதிமுகவில் இப்போது உள்கட்சி குழப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இரட்டைத் தலைமை இருப்பதால் பெரும்பாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுகின்றனர். இருவரது ஆதரவாளர்களும் பொதுவெளியில் கட்சி விவகாரங்களை பேசி வருகின்றனர்.

இதனிடையே, சசிகலாவின் செயல்பாடுகளும் அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொன்விழா ஆண்டு தொடங்கியபோது, தி.நகரில் உள்ளஎம்ஜிஆர் நினைவு இல்லத்தில் கட்சிக் கொடியை சசிகலா ஏற்றிவைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, அதிமுகவினர் அனைவரும் நடந்ததை மறந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதேநேரத்தில், சசிகலா அதிமுகவிலேயே இல்லை என முன்னாள் முதல்வர் பழனிசாமி கருத்து தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ‘‘சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்’’ என்று தெரிவித்தார். இது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பழனிசாமி வெளிப்படையாகவே கூறிவரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த கருத்து பழனிசாமி ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் கருத்துக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசியபிரபாகர், ‘‘சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான். அதிமுகவின் எதிர்காலம் குறித்து சிந்திக்கக்கூடிய தலைமை நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள். தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக் கூடாது என்று கூறியதை இப்போது ஒப்பிட முடியாது. ஓபிஎஸ் - பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என நம்புகிறேன்’’ என்றார்.

அதிமுகவில் உள்கட்சி குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது அக்கட்சியில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக் கூடாது என்று கூறியதை இப்போது ஒப்பிட முடியாது. ஓபிஎஸ் - பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என நம்புகிறேன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x