Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

அரசுத் திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வது நிர்வாகத்தில் வழக்கமானதே - சர்ச்சை ஆக்க வேண்டாம் என தலைமைச் செயலர் விளக்கம் :

அரசு நிர்வாகத்தில் வழக்கமான ஒன்றை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல என்று தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்

புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி அரசின் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமைச் செயலர் இறையன்பு கடந்த 18-ம் தேதி அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியகடிதத்தில், ‘‘தமிழகத்தில் சில துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆளுநர் விரும்புகிறார். எனவே, திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்களை திரட்டி வைத்துக் கொள்வதுடன், ‘பவர்பாயின்ட்’ வழியாக அதை விளக்கவும் தயாராக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

தலைமைச்செயலரின் இந்த கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த நடைமுறை வழக்கமானதுதான் என்று தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்துக்குஆளுநர் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழக அரசின்பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளும்படி,துறை அலுவலர்களுக்கு அலுவல்ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். இது நிர்வாகத்தில் வழக்கமானதுதான். அதை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது தெரியும்’ என்று தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆலோசனை

ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி,வரும் 30-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அவர் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகுநடக்கும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது.

இதில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், நிர்வாகம், கல்வித் தரம், ஆராய்ச்சிகள் குறித்து ஆளுநர் கேட்டறிவார் எனகூறப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் இக்கூட்டத்தில் உயர்கல்வி, சுகாதாரம், கால்நடை, சட்டம், வேளாண்மைத் துறைகளின் செயலர்களும் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x