Last Updated : 27 Oct, 2021 03:08 AM

 

Published : 27 Oct 2021 03:08 AM
Last Updated : 27 Oct 2021 03:08 AM

ஆழியாறு நாற்று பண்ணையில் தென்னங்கன்று தட்டுப்பாடு : உற்பத்தியை அதிகரிக்க தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் ஆழியாறில் வேளாண்துறை சார்பில், கடந்த 1995-ம் ஆண்டு தென்னை நாற்றுப் பண்ணை தொடங்கப்பட்டது. இந்தப் பண்ணையில், உற்பத்தி செய்யப்படும் தென்னை நாற்றுகள் கோவை மட்டுமின்றி, வெளிமாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

8.12 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில், 2.20 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இது தேவையை முழுவதும் பூர்த்தி செய்வதில்லை என்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வயது முதிர்ந்த மரங்கள் அகற்றம்

வக்கம்பாளையத்தை சேர்ந்த விவசாயி எம்.கே.பகவதி கூறும்போது, ‘‘ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனம் தொடங்கப்பட்ட பின்னர் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை பயிரிட்டனர். சுமார் 60 ஆண்டுகள் ஆனதால் அவற்றின் காய்ப்பு திறன் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வயது முதிர்ந்த தென்னை மரங்களை அகற்றி விட்டு, தற்போது, புதிய தென்னை நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல நூறு ஹெக்டேர் பரப்பளவில் மறுநடவு செய்யும் பணி நடைபெறுகிறது. ஆனால் அவர்களுக்கு தேவையான தென்னங்கன்றுகள் ஆழியாறு நாற்றுப் பண்ணையில் கிடைப்பதில்லை. இதனால் அதிக விலை கொடுத்து தனியார் நாற்றுப் பண்ணைகளில் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. ஆழியாறு நாற்றுப் பண்ணையில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.

திவான்சாபுதூரை சேர்ந்த விவசாயி கார்த்திக் கூறும்போது, ‘‘தென்னை சாகுபடியில், கேரளா வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல், சிவப்பு கூன் வண்டு தாக்குதல் ஆகியவற்றால் ஆண்டுதோறும் கணிசமான அளவு மரங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆழியாறு தென்னை நாற்றுப் பண்ணையில் உற்பத்தி செய்த தென்னங்கன்றுகள் தரமானதாகவும், தனியாரை விட விலை குறைவாகவும் இருப்பதால் விவசாயிகள் அவற்றை பெரிதும் விரும்பி நடவு செய்கின்றனர். வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு நடவு செய்தால் மழையில் கன்றுகள் வேர்பிடித்து நன்கு வளர்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், தேவைக்கேற்ப உற்பத்தி இல்லை என்பதால் விவசாயிகள் வேறு மாவட்டங்களுக்கு சென்று தென்னை நாற்றுகளை வாங்கி வர வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவுடன் விவசாயிகளுக்கு வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான தென்னங்கன்றுகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆனைமலை வட்டார வேளாண் உதவி இயக்குநர் விவேகானந்தன் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் சுமார் 87,400 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. ஒருமுறை நடவு செய்வதின் மூலம் 60 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடிய பயிராக உள்ளதுடன், மாதம் ஒரு அறுவடை, குறைவான பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தென்னை சாகுபடியை விவசாயிகள் பெரிதும் விரும்பி மேற்கொள்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான தென்னங்கன்றுகள் ஆண்டுக்கு 80,000 முதல் ஒரு லட்சம் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. தரமான தென்னை நாற்றுகள் தயார் செய்ய 8 முதல் 9 மாதங்கள் ஆகின்றன. நெட்டை ரக கன்றுகள் ரூ.50-க்கும், குட்டை ரக கன்றுகள்ரூ.80-க்கும் விற்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்னை சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆழியாறு நாற்றுப் பண்ணையில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x