Published : 27 Oct 2021 03:08 AM
Last Updated : 27 Oct 2021 03:08 AM

பிரதான குழாய் மாற்றியமைக்கும் பணி - எழும்பூர் உட்பட 9 இடத்தில் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் :

சென்னை வால்டாக்ஸ் சாலை யானைகவுனி பாலம் அருகே பிரதான குழாய்கள் மாற்றிஅமைக்கும் பணிகள் நடப்பதால் இன்று (அக்.27) காலை 9 முதல் நாளை காலை 6 மணி வரை எழும்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், வேப்பேரி உட்பட 9 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் வால்டாக்ஸ் சாலை யானைகவுனி பாலம் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணி நடக்கும் இடத்தில், ஏற்கெனவே உள்ள குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இப்பணிகள் இன்று (அக்.27) காலை 9 முதல் நாளை காலை 6 மணி வரை நடக்கும். அதனால் பகுதி 5-க்கு உட்பட்ட எழும்பூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, சூளை, பார்க் டவுன், ஜார்ஜ் டவுன், சவுகார்பேட்டை, வேப்பேரி மற்றும் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் குழாய் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு ராயபுரம் பகுதிப் பொறியாளரை 81449 30905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x