Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

அரசியலுக்கு யாரும் வரலாம் - அதிமுகவில் சசிகலா சேர்ப்பா? நிர்வாகிகளுடன் பேசி முடிவு : ஓபிஎஸ் கருத்தால் அதிமுகவில் சர்ச்சை

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்றுக்கொள்வது மக்களின் முடிவு. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இது அதிமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அக்.30-ல் நடக்கிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அணிவிப்பதற்காக அதிமுக சார்பில் வழங்கிய பதிமூன்றரைக் கிலோ தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரிலுள்ள வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட பின் தங்கக்கவசம் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் கார் மூலம் தங்கக் கவசம் பசும்பொன் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுகவின் அத்துமீறிய செயல்களால் அதிமுகவின் வெற்றி மறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளோம். நீதிமன்றத்தையும் நாடுவோம். அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை தடுத்து நிறுத்தும் வகையில் செயல்பட்டால் போராட்டங்களை நடத்துவோம். அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, மத்திய மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது. அத்யாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதற்கு இரு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்கக் கூடியது மக்களின் மனநிலையைப் பொருத்தது. அதிமுக தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்ந் துள்ளது. இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள்.

என்னைப் பொருத்தவரை அரசியல் இயக்கங்களை நடத்துவோர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அரசியல் ரீதியான கருத்துகளைச் சொல்லும்போது, கண்ணியத்தோடும் அரசியல் நாகரிகத்தோடும் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்த ஓபிஎஸ்ஸின் கருத்து அதிமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, “சசிகலா, அவரைச் சார்ந்தவர்களை எதிர்த்தும் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்தான் அவர் தர்மயுத்தம் நடத்தினார். அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை. சசிகலாவை பொருத்தவரை பொதுக்குழுவில் நீக்கப்பட்டுவிட்டார். அவருடன் தொடர்பு வைத்தவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஓபிஎஸ் பேசியது குறித்து முழுமையாக கேட்டபின் விளக்கம் அளிக்கிறேன். சசிகலா தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு எடுக்க வேண்டும். அதுதான் என் நிலையும்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என ஒரு தெளிவான முடிவை ஏற்கெனவே தலைமை நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை” என்றார்.

பழனிசாமி படம் இல்லாத பேனர்கள்

முன்னதாக மதுரை வந்த ஒருங் கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று நகரின் பல பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் பழனிசாமி படம் இடம் பெற வில்லை. ஓபிஎஸ் மற்றும் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரது படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x