Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

ஐசிசி டி 20 உலகக் கோப்பை - இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை : தொடரை வெற்றியுடன் தொடங்குமா விராட் கோலி படை

துபாய்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மோதியிருந்தன. சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் மோத உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை டி 20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஒருமுறை கூட இந்திய அணி தோல்வியை சந்தித்தது இல்லை. இந்த 5 ஆட்டத்திலும் தோனி கேப்டனாக இருந்தார்.

தற்போது முதன்முறையாக தோனி ஆலோசகராக மாறி உள்ள நிலையில் டி 20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி. இரு அணிகளுமே ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்களாகவே உள்ளனர். இந்திய அணியில் உள்ள வீரர்கள் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் துபாயில் விளையாடியிருந்தனர். அதேவேளையில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களை சொந்த இடமாக கொண்டு விளையாடி உள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரை கொண்டு வலுவாக உள்ளது. இந்த பேட்டிங் வரிசைக்கு ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, இமாத் வாசிம், ஷதப் கான் ஆகியோரை உள்ளடக்கிய பாகிஸ்தான் பந்து வீச்சு துறை சவால் தர முயற்சிக்கக்கூடும். இந்திய அணியின் ஒரே பிரச்சினை 6-வது பந்து வீச்சாளர் இல்லாததுதான். ஏனெனில் ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதற்கான முழு உடற்தகுதியை இன்னும் எட்டவில்லை. எனினும் மட்டை வீச்சில் அவர் தனது முழுதிறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் பாபர் ஆஸம், பஹர்ஸமான், மொகமது ரிஸ்வான் மற்றும் அனுபவ வீரர்களான ஷோயிப் மாலிக், மொகமது ஹபீஸ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இந்த பேட்டிங் வரிசைக்கு ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், ராகுல் சாஹர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய பந்துவீச்சு துறை சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

வங்கதேசம்....

முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 1ல் இடம் பெற்றுள்ள இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே முதற்கட்ட சுற்றில் விளையாடியே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x