Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் - ‘கூழாங்கல்’ திரைப்படம் பரிந்துரை : 15 பேர் கொண்ட குழு ஒருமனதாகத் தேர்வு

‘கூழாங்கல்’ திரைப்படத்தில் ஒரு காட்சி.

சென்னை

ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘கூழாங்கல்’ திரைப்படம் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத் தில் உருவாகியுள்ள படம் ‘கூழாங்கல்’. இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்துதயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். உலக அளவில் பிரபலமான பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இத் திரைப்படம் திரையிடப்பட்டு, பல விருதுகளையும் வென்று வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு ‘கூழாங்கல்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சிறந்த வெளிநாட்டு/ சர்வதேச திரைப்படம் என்றபிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரை செய்யப்படும். அதற்கு, இந்தியாவில் வெளியான படங்களை தேர்வு செய்யும் பணி நடந்துவந்தது. இதில், வித்யாபாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல்நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’, தமிழில் இருந்து ‘மண்டேலா’, ‘கூழாங்கல்’ ஆகிய படங்கள் போட்டியிட்டன.

இப்படங்களை இயக்குநர் ஷாஜி என்.கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு பார்வையிட்டது. அதில் இருந்து ‘கூழாங்கல்’ படம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுசார்பில் படக்குழுவினருக்கு இத்தகவல் பகிரப்பட்டுள்ளது. இதை விக்னேஷ் சிவன் தனதுட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தி யுள்ளார்.

இதற்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விசாரணை’ படம் ஆஸ்கர் விருதுக்குபரிந்துரைக்கப்பட்டது. அதற்குபிறகு தற்போது ‘கூழாங்கல்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தமிழ் திரைத் துறைக்கு கிடைத்த கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022 மார்ச் 27-ம் தேதி நடக்க உள்ளது.

‘கூழாங்கல்’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது தமிழ் திரைத் துறைக்கு கிடைத்த கவுரவமாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x