Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் - பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன் : கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வாக்குறுதி

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு இலவச திட்டங்கள் நிறை வேற்றப்படும் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

உ.பி.யில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களைக் கவர் வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் உ.பி. மாநில பொறுப்பாளராக நியமிக்கப் பட்டிருக்கும் பிரியங்கா காந்தி, மாநிலம் முழுவதும் மக்களைச் சந்தித்து வருகிறார். உ.பி.யின் பாராபங்கி பகுதியில் நேற்று பிரதிக்யா யாத்திரையை பிரியங்கா காந்தி தொடங்கி வைத்தார். அப்போது வாக்காளர்களுக்கு 7 வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.

யாத்திரை தொடக்க விழாவில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

இந்த யாத்திரை நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெறும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வரும் தேர்தலில் 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும். பெண்களின் முன்னேற்றமே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்.

மேலும் இந்தத் தேர்தலுக்காக 7 வாக்குறுதிகளை நாங்கள் அளிக்கிறோம். பெண்களுக்கு இலவச இ-ஸ்கூட்டர், பள்ளி செல்லும் மாணவிகளுக்கு செல்போன்கள், விவசாயக் கடன் ரத்து, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் நிதியுதவி, பாதியளவு மின் கட்டணம், கரோனா காலத்தில் கட்டப்படாமல் நிலுவையில் உள்ள மின் கட்டணத் தொகை தள்ளுபடி ஆகிய 7 வாக்குறுதிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று வோம் என உறுதி அளிக்கிறேன்.

மேலும் 20 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், ஒரு குவிண்டால் அரிசி, கோதுமை ஆகியவற்றுக்கு தலா ரூ.2,500 குறைந்தபட்ச ஆதரவு விலை தரப்படும். மேலும் கரோனா பாதித்த ஏழை விவசாயிகள் தரும் கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.400 வழங்கப்படும்.

ஏழை விவசாயப் பெண்களின் நிலையையும், கஷ்டத்தையும் நான் அறிவேன். அவர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதே சிரமமாக உள்ளது. அவர்கள் படித்து நல்ல நிலைக்கு வந்தால்தான் அவர்களது வாழ்க் கைத் தரம் உயரும் என்பதை நான் அறிவேன். ஏழைகளின் நிலை உயர காங்கிரஸ் கட்சி பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரதிக்யா யாத்திரை மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு செல்லவுள்ளது. இந்த யாத்திரை புந்தேல்கண்ட் வழியாக ஜான்சியை அடையும். லக்னோ, உன்னாவ், பதேபூர், சித்ரகூட், பண்டா, ஹிமீர்பூர், ஜலவுன் ஆகிய நகரங்கள் வழியாகவும் யாத்திரை செல்லும்.

2, 3-வது கட்டங்களில் சஹாரன்பூரில் தொடங்கும் யாத்திரை ரே பரேலியில் நிறை வடையும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x