Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு - கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் சோதனை : சேலம், சென்னை உட்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்தினர்

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு சொந்தமான 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திர கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (57). சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். அத்துடன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான, தீவிர ஆதரவாளர். இவரது மகன் பிரவீன்குமார் (27), திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவராக உள்ளார்.

இளங்கோவன், பிரவீன்குமார் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத் துறை திருவண்ணாமலை மாவட்ட டிஎஸ்பி மதியழகன், இன்ஸ்பெக்டர் மைதிலிஉள்ளிட்டோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை 5.30 மணிக்கே இளங்கோவன் வீட்டுக்கு வந்தனர். அவரது வீடு ‘பயோமெட்ரிக் லாக்கிங்’ முறையில் பூட்டப்பட்டிருந்ததால், போலீஸார் போர்டிகோவிலேயே காத்திருந்தனர்.

சென்னையில் இருந்த இளங்கோவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் நண்பகல் 12 மணிக்குமேல் புத்திர கவுண்டம்பாளையம் வந்தார். அதன்பிறகே லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையை தொடங்கினர்.

போலீஸார் சோதனைக்கு வந்ததகவலை அறிந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி, சித்ரா, பாலசுப்ரமணியன், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் உட்பட 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இளங்கோவன் வீட்டின் அருகே திரண்டனர். அவர்கள், போலீஸார் மற்றும் திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் மாமனார் சாமமூர்த்தி, சகோதரி ராஜகுமாரி, நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், சேலத்தில் உள்ள இளங்கோவனின் ஆடிட்டர் அலுவலகம் மற்றும் திருச்சி, சென்னை உட்பட சில மாவட்டங்களில் அவரது ஆதரவாளர், உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இளங்கோவனின் ஆதரவாளரும் ஒப்பந்ததாரருமான நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தைச் சேர்ந்த தென்னரசுவின் பிஎஸ்டி கட்டுமான நிறுவன அலுவலகம், பரமத்தி அருகே கோலாரத்தில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் கோடம்பாக்கம் 2-வது தெருவில் ராஜ் நாராயணன் என்பவரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், அவரது வீடு, யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள நிறுவனம், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அலுவலகம் ஆகியஇடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான எம்ஐடி இன்ஸ்டிடியூட் வளாகம், எம்ஐடி வேளாண்மை கல்லூரி, இளங்கோவனின் நண்பர் நடராஜன் வீடு, ஆதரவாளர் வத்சலா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மற்றும் கரூர் மாவட்டம் லாலாபேட்டை புதுத்தெருவில் உள்ள இளங்கோவனின் சகோதரி இந்திராணி வீடு ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் தலைவராக பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் அளவுக்கு, ரூ.3 கோடியே 78 லட்சத்து 31,755 மதிப்புள்ள சொத்துகளை சேர்த்துள்ளதாக இளங்கோவன் மற்றும் அவரது மகன்பிரவீன்குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் ரூ.29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பேருந்துகள், 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 21.2 கிலோ தங்க நகைகள், 282 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகை ரூ.68 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டன. வழக்குக்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

பழனிசாமி கண்டனம்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘இளங்கோவனின் செயல்பாடுகளை முடக்கும் வகையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவரது வீடுகளில் சோதனை நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என கூறியுள்ளார்.

சி.விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில்..

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உட்பட 50 இடங்களில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், அண்ணாநகர் மேற்கில் உள்ள மற்றொரு உதவியாளரான முருகன் வீடு மற்றும் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மற்றொருநண்பரான மருத்துவர் செல்வராஜா வீடு ஆகிய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

கடந்த 18-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது விஜயபாஸ்கர் தொடர்புடைய சில அலுவலகம் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை பெற்று அந்த இடங்களில் பூட்டை உடைத்து சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x