Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டம் குறித்த - சந்தேகங்களுக்கு 100 கோடி சாதனை மூலம் பதில் : பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி

இந்தியாவில் மக்களுக்கு 100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது 130 கோடி இந்தியர்களின் சாதனை. ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதனையில் பங்கிருக்கிறது. 100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. இது நமது நாட்டின் வலிமையை பறை சாற்றுகிறது. வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தியில் வளர்ந்த நாடுகள் மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருந்தன. வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் தடுப்பூசிகளையே இந்தியா நம்பியிருந்தது. இந்த காரணத்தினால் கரோனா பெருந்தொற்றை இந்தியாவால் எதிர்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கு தேவையான நிதியை இந்தியாஎங்கிருந்து பெறும்? இந்தியாவுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்? இந்திய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா? தொற்று பரவலைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசிசெலுத்த முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள்எழுப்பப்பட்டன.

இந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 100 கோடி தடுப்பூசிகளை கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதுவும் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் அனைத்து பலன்களும் கிடைக்க வேண்டும். இதுவே இந்திய ஜனநாயகம். இதை முன்னிறுத்தி "இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. ஏழை, பணக்காரர், கிராமவாசி, நகரவாசி என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை.

கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள், முன்முயற்சிகள் இந்தியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடைய செய்கிறது. கரோனா தொற்று காலத்தில் வேளாண் துறை நமது பொருளாதாரத்தை வலுவானதாக வைத்திருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்து வருகிறது. இதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

எந்தவொரு பொருளை வாங்கினால் கூட அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? இந்தியர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டதா என்பதை பார்த்து மக்கள் வாங்குகின்றனர். தூய்மைஇந்தியா இயக்கம் மக்கள்இயக்கமாக மாறி வெற்றியடைந்தது. அதே வழியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் இயக்கத்தை வெற்றி யடைய செய்ய வேண்டும்.

போரின் போது பாதுகாப்பு கவசங்கள் முழு பாதுகாப்பு அளிக்கிறது என்பதற்காக ஆயுதங் களை தூக்கி வீசி விடக் கூடாது. பாதுகாப்பு கவசங்களும் அவசியம், ஆயுதங்களும் அவசியம். இதே போல தடுப்பூசி பாதுகாப்பும் அவசியம். வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் என்ற ஆயுதங்களும் அவசியம். எங்கு சென்றாலும் முகக்கவசம் ,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்குவிக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x