Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

குமரியில் மழை சேதத்தை முழுமையாக கணக்கிட்டு - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : குறைதீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களின் முழு சேத விவரங்களை கணக்கிட்டு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சமீபத்தில் பெய்த கனமழையால் ஆறு, கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்பு மற்றும் வெள்ளச் சேதங்களை தடுப்பதற்கு துரிதமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை முறையாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ள மரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதிகாரிகள் தரப்பில் பொதுப்பணித்துறை மூலம் பாசன கால்வாய்கள், குளங்களை தூர்வாரி, நீர்நிலைகளை பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முறிந்த ரப்பர் மரங்களை தனியார் காடுகள் சட்டத்தின் கீழ் வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அவற்றால் விவசாயிகள் பாதிக்காத வகையில் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

தேனீ மகத்துவ மையத்தின் மேம்பாட்டுக்கான செயல்பாடுகள், பயிற்சிகள், மற்றும் அவற்றின் மூலம் விவசாயிகள் பயனடைய இருக்கும் வாய்ப்புகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் தெரிவித்தார்.

மழை வெள்ளம், புயல் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுத் தொகை பெற வாய்மொழி குத்தகைதாரர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட சான்று போதுமானது என வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x