Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM

நாட்டுக்கு துரோகம் செய்தவர்களை எங்கு சென்றாலும் விட்டுவிடாதீர்கள் : சிவிசி, சிபிஐ-க்கு பிரதமர் மோடி அறிவுரை

ஊழலை எதிர்த்து போராடுவதில் முந்தைய அரசுக்கு விருப்பமோ அரசியல் உறுதியோ இல்லை என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐ அமைப்புகளின் கூட்டு மாநாடு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நேற்று நடந்தது. இதில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான அரசின் கடுமையான நடவடிக்கைகளால் ஊழலுக்கு எதிராக போராடி ஊழலை ஒழிப்பது சாத்தியம்தான் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளோம். மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், ஊழல் இல்லாமல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை மக்கள் நேரடியாகப் பெறுகின்றனர்.

ஆனால், ஊழலை எதிர்த்துப் பேராடுவதில் முந்தைய அரசுக்கு (காங்கிரஸ் அரசு) விருப்பமோ அரசியல் உறுதியோ இல்லை. இப்போது மத்திய அரசின் ஊழலை எதிர்த்துப் போராடும் அரசியல் உறுதியாலும் நிர்வாக சீர்திருத்தங்களாலும் ஊழல் ஒழிப்பு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஊழல் என்பது சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அதனால் மக்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் முட்டுக்கட்டையாக உள்ளது.

ஊழல் செய்து நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்பவர்களுக்கு உலகில் எந்த இடத்திலும் பாதுகாப்பான புகலிடம் இல்லை என்பதை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தாய் நாட்டுக்காகவும் நாம் பிறந்த மண்ணுக்காகவும் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் என்பதை மறக்கக் கூடாது.

நாட்டுக்கும் மக்களின் நலன்களுக்கும் எதிராக செயல்படுபவர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தா லும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலைத் தடுக்க அரசின் பலன்களை மக்கள் நேரடியாக பெறும் வகையிலும் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் வகையிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x