Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு உட்பட50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை - : வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் வீடு உட்பட 50 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச் சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ வாக இருக்கிறார். இவர் மீதும் இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்ப தாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய் வாளர் பீட்டர் புகார் அளித்தார். இதன்பேரில் டிஎஸ்பி இமயவரம்பன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக புதுக் கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது, அங் கிருந்த விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, தாய் அம்மாக்கண்ணு, மூத்த சகோதரர் உதயகுமார், இவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விஜயபாஸ்கரின் அலு வலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட அங்கு மட்டும் 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினருக்கும் போலீ ஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட துணைக் கண்காணிப் பாளர்கள் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸார், பல்வேறு குழுக் களாக பிரிந்து ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் இரவு வரை நீடித்தது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

திருச்சி, செங்கை, கோவை

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச் சந்திரா நகரில் அடுக்குமாடி குடியிருப் பில் வசிக்கும் விஜயபாஸ்கரின் சகோ தரர் உதயகுமாரின் 2 வீடுகள், அதே குடியிருப்பில் வசிக்கும் உறவினரும் ஒப்பந்ததாரருமான தர்மலிங்கத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து 203 பவுன் நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஈசிஆர் சாலை யில் உள்ள விஜயபாஸ்கரின்‌ சகோதரி தனலட்சுமியின் வீடு மற்றும் பல் மருத்துவமனையில் சோதனை நடந் தது. சோதனையை கண்டித்து அதிமுக வினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி கார்டனில் உள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீடு, பீளமேடு வணிக வளாக கட்டிடத் திலும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத்தில் உதவியாளர் அஜய்குமார் வீட்டிலும் சோதனை நடத்தப் பட்டது.

இதுதவிர சென்னையில் விஜயபாஸ் கருக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் விஜய்சாந்தி அடுக்குமாடி குடியிருப் பில் உள்ள வீடு மற்றும் அவரது உதவியாளர்கள் வீடுகள் உட்பட 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6 கோடியே 44 லட்சத்து 91,310 என்று தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ரூ.58 கோடியே 64 லட்சத்து 25,887 ஆக சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடியே 22 லட்சத்து 56,736 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

4.87 கிலோ தங்கம் பறிமுதல்

இந்த சோதனையில் ரூ.23 லட்சத்து 85,700 ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், 19 ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை கீழ்ப் பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் அங்கு வந்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட சொத்து விவரம்

விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது பதிவான எப்ஐஆர்-ல் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்கள்: 7 டிப்பர் லாரிகள், 10 கலவை இயந்திரங்கள், ஒரு ஜேசிபி என ரூ. 6 கோடியே 58 லட்சத்து 78,466 மதிப்பு வாகனங்கள், ரூ.53 லட்சத்து 33,156 மதிப்பில் சொகுசு கார், ரூ.40 லட்சத்து 58,975 மதிப்பில் 85 பவுன் நகைகள், சிலவாட்டம் மற்றும் மொரப்பாக்கத்தில் ரூ.3 கோடியே 99 லட்சத்து 5,400 மதிப்பில் விவசாய நிலங்கள், சென்னையில் ரூ.14 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் ஒரு வீடு, ரூ.28 கோடியே 69 லட்சத்து 73,136 மதிப்பில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரர் மற்றும் அவர்களால் நடத்தப்படும் 14 கல்வி அறக்கட்டளைகள் கட்டுமானம் குறித்தும் சந்தேகம் உள்ளது. இவ்வாறு எப்ஐஆர்-ல் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x