Published : 18 Oct 2021 03:10 AM
Last Updated : 18 Oct 2021 03:10 AM

சிவன்மலையில் 5,100 மரக்கன்றுகள் நடவு :

காங்கேயம் வட்டம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான கருங்கல் வனம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை சார்பில்கோயில்களில் தல மரக்கன்றுகள் நடவுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம்மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் 3,000 மரக்கன்றுகள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் 1,000 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான கருங்கல்வனத்தில், 24 ஏக்கர் பரப்பளவில் 3,100 மரக்கன்றுகள் நடவு செய்தல்,2,000 பனை விதைகளை விதைத்தல் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கருங்கல் வனம் பசுஞ்சோலையாக மாறும். அதோடு இப்பகுதியில் பெய்யக்கூடிய மழைநீரை சேமிக்கும் வகையில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு, இதன் கரையோரங்களில் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், காங்கயம் துளிகள் அமைப்பினர், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x