Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் - வருமுன் காப்போம் திட்டம் தொடக்கம் : ரூ.2.87 கோடி நலத்திட்டங்களையும் முதல்வர் வழங்கினார்

கொளத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொளத்தூர் சட்டப்பேரவைதொகுதிக்குட்பட்ட திருவிகநகர் மண்டலம், சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், மருத்துவ முகாமை முதல்வர்ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில், 35 மருத்துவர்கள்,60 செவிலியர்கள், 3 மருந்தாளுநர்கள், 20 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இம்முகாம் மூலம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவர். சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும், தலா ஒரு முகாம் வீதம் இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்பட்டு மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில், தனியார் பள்ளியில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 16 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், திருமண நிதியுதவி, வங்கிக்கடன் மானியம், தையல் இயந்திரங்கள், மாதாந்திர ஓய்வூதிய ஆணைகள், 312 பயனாளிகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதி உட்பட 560பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடிக்கான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கொளத்தூர் பெரியார் நகர்,மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர்மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தி, கரோனாதடுப்பூசி பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 70 பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய முதல்வர், 34 ஆசிரியர்களை கவுரவித்தார். அப்பள்ளிக்கு கட்டிடம் கட்ட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிசார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை, முதல்வரிடம் வங்கியின் நிர்வாக இயக்குநர் கே.வி.ராமமூர்த்தி வழங்கினார்.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x