Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM

ஆண்டு முழுவதும் பொன்விழா கொண்டாடப்படும் - அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ‘எம்ஜிஆர் மாளிகை' என பெயர் : ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொன்விழா, ஆண்டுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை' என பெயர் சூட்டப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா வள்ளல் எம்ஜிஆர், 1972 அக்.17-ம் தேதி அதிமுகவை தொடங்கினார். அப்போது ஏற்பட்ட அரசியல்எழுச்சியும். புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்றும்,இன்றும், நாளையும் தமிழகத்தின்அசைக்க முடியாத அரசியல் சக்தியும், மக்கள் தொண்டாற்றுவதில் நிகரில்லாததும் அதிமுக மட்டுமே என்பதை வரலாறு எடுத்துரைத்துக் கொண்டே இருக்கிறது.

முன்னோடிகளுக்கு பதக்கம்

தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல இருப்பதை அறிந்துதான் கட்சிக்கு அனைத்திந்திய அதிமுக என்று பெயர் சூட்டினார்.அதிமுக பொன்விழா தமிழகத்திலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும்ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். பிரம்மாண்டமான பொன் விழா மாநாடு நடத்தப்படும். சிறப்பு இலச்சினை வெளியிடப்படும். பொன்விழா இலச்சினை பொறிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்கள் கட்சியின் முன்னோடிகளுக்கு அணிவிக்கப்படும்.

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரது படங்களுடன் ஒரே மாதிரியான பதாகைகள். சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்படும். சுவர் விளம்பரங்கள், இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்படும்.

அதிமுக வளர்ச்சிக்கு தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த ஆண்டு முதல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் விருதுகள் வழங்கப்படும். பொன் விழா ஆண்டையொட்டி பேச்சு, கட்டுரை, கவிதை, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அதிமுக தொடங்கியது முதல் இன்று வரைநடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ‘மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் குறிப்பேடாக வழங்கப்படும்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை' என்று பெயர்சூட்டப்படும். தலைமைக் கழக பேச்சாளர்கள், கலைக் குழுவினருக்கு உதவிகள் செய்யப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி நூல்கள் எழுதியவர்கள் கவுரவிக்கப்படுவர்.

வாரிசு அரசியல், ஜாதி, மத அரசியல், மனிதர்களை பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல் என்ற சிறுமைச் சிந்தனைகள் ஏதுமின்றி, எல்லோருக்கும், எல்லாமுமாக திகழதோற்றுவிக்கப்பட்ட அதிமுக, 30ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து பல சாதனைகள் படைத்துள்ளது. உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் சத்துணவுத் திட்டம், அம்மா உணவகம், 69 சதவீதஇட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள், பட்டியலினத்தோருக்கு இடஒதுக்கீடு, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய திட்டங்கள் என்று காலமெல்லாம் நிலைத்திருக்கும் திட்டங்களை இந்திய நாட்டுக்கே அறிமுகம் செய்த இயக்கம்தான் அதிமுக.

அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்து,மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று,வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழகம் உருவாக பொன்விழா ஆண்டில் சூளுரைப்போம்.

இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x