Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் - மாவட்ட ஊராட்சி பதவிகளில் 91% இடங்களை பிடித்த திமுக : மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிப் பதவிகளில் 91 சதவீத இடங்களை திமுக பிடித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாகநடந்தது. கடந்த 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 9 மாவட்டங்களில் 13-ம் தேதியும் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அன்று இரவும் முழுமையான வெற்றி விவரம் கிடைக்காத நிலை இருந்தது.

இந்நிலையில், வெற்றி விவரங்களை https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மாவட்டங்கள் மற்றும்இதர மாவட்டங்களில் நடந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில்139 இடங்களையும் (90.85%), ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில், 978 இடங்களிலும் (68.82%) திமுக வெற்றிபெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, 1.31% மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களிலும், 14.94% ஊராட்சி ஒன்றிய இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல்வெற்றி 100 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் 0.28 சதவீதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 மாவட்டங்களில் திமுக மற்றும்அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. திமுக மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான 126 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் 941 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுகவே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் வரும் 22-ம் தேதி நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x