Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் - மலைப் பள்ளிகளை ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளாக மாற்ற கோரிக்கை :

உடுமலை

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக தளிஞ்சி, கோடந்தூர், குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட 5 இடங்களில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 100 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளை, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: அடர்ந்த வனப்பகுதி, செங்குத்தான மலைகளுக்கு நடுவே எங்கள் குடியிருப்புகள் உள்ளன. அரசுப் பள்ளிகள் பல ஆண்டுகளாகவே முழுமையாக செயல்படுவதில்லை. பதவி உயர்வுக்காக மட்டுமே இப்பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை. நெடுந்தொலைவு, போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் ஆசிரியர்களே தினமும் வந்து செல்ல இயலாத இப்பள்ளிகளுக்கு ஆசிரியைகளை நியமித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. வனவிலங்குகள் நடமாட்டம், சறுக்கலான மலைப் பாதைகள் ஆகியவற்றை மலைவாழ் மக்களை தவிர்த்து, வெளி நபர்கள் யாரும் எளிதாக கடந்துவிட முடியாது. முறையான பள்ளி வசதி இல்லாத காரணத்தால் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல், மலைவாழ் குழந்தைகளில் எதிர்காலம் வீணடிக்கப்படுகிறது.

இந்நிலையை மாற்ற மலைப் பள்ளிகள் அனைத்தையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்ற வேண்டும். பணிக்கு வரும் ஆசிரியர்கள், அங்கேயே தங்கி கல்வி கற்றுக் கொடுப்பதால் மட்டுமே மலைவாழ் குழந்தைகளின் கல்வி மேம்படும். இதுதொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கல்வித் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x