Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கோயம்பேடு, வேளச்சேரியில் உள்ள - மேம்பாலங்களை விரைவில் திறக்க வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2017-க்கு பின், சென்னையில் கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மிகப்பெரிய உயர்மட்டப் பாலத்தை ரூ.100 கோடி செலவில் கட்ட அதிமுக அரசு ஒப்புதல் அளித்து, 95 சதவீத பணிகள்கடந்தாண்டு டிசம்பரில் முடிந்திருந்தது.

தற்போது பாலப்பணிகள் முழுமையடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர். குறிப்பாக, கடந்த 13-ம் தேதி நவராத்திரியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனால்,கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டனர்.

அதிமுக அரசில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்பட்ட பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு உடனுக்குடன் திறக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு உடனுக்குடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், சென்னையில் அதிமுகஅரசால் தொடங்கப்பட்ட வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் ரூ.110 கோடி செலவிலான, வேளச்சேரி 2 அடுக்கு மேம்பாலத்தின் முடிந்த பகுதியையும், ரூ.146 கோடியில் கட்டப்படும் மேடவாக்கம் மேம்பாலத்தையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x