Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

2020-21-ம் ஆண்டில் வருவாய் ரூ.1,075 கோடி : தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் தகவல்

தேசிய அஞ்சல் வார விழா அக்.11-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி (நாளை) வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றிய அஞ்சல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்னையில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைவர் (மெயில், வர்த்தக வளர்ச்சி) வீணா ஆர்.சீனிவாஸ் வரவேற்றார்.

விழாவில் தலைமை உரையாற்றிய தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் பி.செல்வகுமார், “வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள், பாஸ்போர்ட் வழங்கும் சேவைகள், மின்கட்டணம் மற்றும் போக்குவரத்துக் காவல்துறை விதிக்கும் அபராத கட்டணங்களை வசூல் செய்யும் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020-21-ம் ஆண்டில் தமிழக அஞ்சல்துறை ரூ.1,075 கோடி வருவாய் ஈட்டியுள்ளது'' என்றார்.

தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அஞ்சல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் மற்றும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில், மதுரை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன், பொதுமேலாளர் (நிதி) எம்.அனிதா, அஞ்சல் சேவைகள் இயக்குநர் பி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x