Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 வரை நீட்டிப்பு :

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏற்கெனவே அக்டோபர் 15-ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மேலும் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதேபோல் தினசரி, சமூதாய பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும், அனைத்து நாட்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாக திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்.

திருமண விழாக்களில் அதிகப்பட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். அனைத்துவித கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகள், தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி இரவு 11 மணி வரை இயங்கலாம். மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம். சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக இயங்கலாம். திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் கரோனா விதிகளைப் பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x