Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி :

திருநெல்வேலியில் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டை மகாராஜ நகர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் இயக்குநர் ஜெயேந்திரன் மணி, பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் பூஜை நடைபெற்றது. பள்ளி தாளாளர் துரைசாமி, முதல்வர் ஈனோஷ் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அரிசியில் எழுதச்செய்து பள்ளியில் சேர்த்தனர். இதுபோல் பல்வேறு பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வள்ளியூர்

வள்ளியூரில் உள்ள பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வள்ளியூர் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி மற்றும் வித்யாரம்ப விழா நடந்தது.

பள்ளியில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. விஜயதசமியன்று வித்யாரம்பம் நடந்தது. ஆசிரியை பவானி கடவுள் வாழ்த்து பாடினார். ஆசிரியை தேவி வரவேற்றார்.

பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு, அட்சதை பரப்பிய தட்டில் “ஓம்” என எழுத வைத்து, வித்யாரம்பம் எனப்படும் முதற்கல்வியைத் தொடங்கி, பள்ளியில் சேர்த்தனர். நிகழ்ச்சியை விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டச் செயலாளர் ஐயப்பன், தாளாளர் எஸ்.கே.சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் தி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை பவித்ரா நன்றி கூறினார். ஆசிரியை சந்திரா செல்வி தொகுத்து வழங்கினார்.

வள்ளியூர் மெர்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்கள் நடைபெற்றன. பள்ளியில் கொலு அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விஜயதசமியன்று பள்ளியில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு அட்சதையில் ‘ஓம்’ என எழுதவைக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ஆர். முருகேசன், பள்ளி முதல்வர் ஆர்.ஆண்டாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x