Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

லக்கிம்பூர் கெரி கலவரம் - மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை நீக்க குடியரசுத் தலைவரிடம் ராகுல் மனு :

லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவிவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையிலும் 4 விவசாயிகள் 2 பாஜகவினர் உட்பட8 பேர் கொல்லப்பட்டனர்.

விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை மோதியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்தார். ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தரபிரதேச போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கடந்த சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோனி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பிரியங்கா காந்தி குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக விசாரணை நியாயமாக நடக்க மத்திய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:

லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை மத்திய அமைச்சராக இருக்கும் நிலையில், விசாரணை நியாயமாக நடக்காது. பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால், அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கலவரம் குறித்து பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு விவசாயிகள் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாகும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

‘குடியரசுத் தலைவர் உங்களுக்கு ஏதேனும் உத்தரவாதம் அளித்தாரா?’ என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, ‘‘இதுதொடர்பாக இன்றேஅரசுடன் பேசுவதாக குடியரசுத்தலைவர் எங்களிடம் உறுதியளித்தார்’’ என்று கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x