Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி :

புதுடெல்லி: உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

டெல்லியில் வசித்து வரும் மன்மோகன் சிங்குக்கு நேற்று காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. கரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை பெற்ற நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளது. அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், பல்வேறு கட்சியின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது 89 வயதான மன்மோகன் சிங், 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்தார். அதற்கு முன்னதாக நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவிவகித்தார். இவர் நிதி அமைச்சராக இருந்தபோதுதான் நாட்டில் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x