Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் - பாமகவின் வெற்றி கவுரவமானது : நிறுவனர் ராமதாஸ் கருத்து

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக பெற்றுள்ள வெற்றி கவுரவமானது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

உள்ளாட்சித் தேர்தலில் பாமகசார்பில் போட்டியிட்ட, வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள். பாமகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி. இத்தேர்தலில் பாமகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி போதுமானது அல்ல.

தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்குகளுக்கு பணத்தை வாரி இறைத்தன. வேட்புமனுத் தாக்கலில் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் அரசு இயந்திரம் ஆளுங்கட்சியின் கட்டளைகளுக்கு பணிந்தது. பாமக வென்றிருக்க வேண்டிய பல இடங்களில் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. பாமக இப்போது வெற்றி பெற்ற இடங்களில் பலவற்றிலும்கூட முடிவுகளை மாற்ற முயற்சிகள் நடந்தன. இவை அனைத்துமே போராடிப் பெற்ற வெற்றி ஆகும். அந்த வகையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து பாமக பெற்றுள்ள வெற்றி கவுரவமானது, மரியாதைக்குரியது.

பாமக தனித்து போட்டியிட்ட போதிலும் ஆளும் திமுக, ஆட்சி செய்த அதிமுக ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பாமகவை அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியை பெற முடியாமல் போனவர்களும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலம் அடுத்து வரும் தேர்தல்களில் மக்களின் ஒரே தேர்வு பாமகதான் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x