Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து - மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனப் பேரணி :

மேட்டுப்பாளையத்தில் தொழிற்பேட்டை அமைக்க, விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளேபாளையம், இலுப்பநத்தம் ஊராட்சிகள் மற்றும் அன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பொகளூர், வடக்கலூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகள் என 6 ஊராட்சிகளை மையப்படுத்தி 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக கடந்த இரு மாதங்களாக, நில அளவை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ‘‘தொழிற்பேட்டை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் உள்ளூரை சேர்ந்த சுமார் முப்பதாயிரம் மக்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடும். இயற்கை வளம் மிக்க இப்பகுதியில் ஜவுளிப் பூங்கா மற்றும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகள் அமைந்தால் நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசுபட்டு விவசாயம் அழிந்துவிடும். யாரும் வாழவே முடியாத சூழல் உருவாகும்,’’ என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

6 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், கடந்த 2-ம் தேதி வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.

அக்கரை செங்கப்பள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தொடங்கிய இப்பேரணி நிலம் கையகப்படுத்தப்படும் 6 ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்கள் வழியாகவும் சென்றது. இதுதொடர்பாக பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கூறும்போது, ‘‘இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசின் கவனத்துக்கு எங்களது பிரச்சினையை கொண்டு செல்லவும் பேரணி நடத்தப்பட்டது. தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது. சூழல் மாசுபாட்டை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்காக நிலத்தை அளிக்க மாட்டோம். அரசு இவ்விஷயத்தில் ஊர் மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்த முயன்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x