Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது; மல்லிகை கிலோ ரூ.2,000 :

கரூர்/ அரியலூர்/ திருச்சி: ஆயுத பூஜையை முன்னிட்டு, கரூர் பூச்சந்தையில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,000, முல்லைப்பூ ரூ.1,000, ஜாதிப்பூ ரூ.800 முதல் ரூ.850, சம்பங்கி ரூ.300 முதல் ரூ.350, செவ்வந்தி ரூ.250, மரிக்கொளுந்து ரூ.80, துளசி 4 கட்டு 60-க்கு நேற்று விற்பனையாகின. வாழை மரக்கன்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகம் காரணமாக வாழைத்தார் விலை கடந்த 2 நாட்களாக விலை உயர்வின்றி வழக்கமான ரூ.400-க்கே விற்பனையானது. ஆயுத பூஜையையொட்டி பொரி, கடலை விற்பனை நிலையங்கள், பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதேபோல, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாழைத்தார், கரும்பு, பூக்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு, அரியலூர் சந்தைகளில் குவிக்கப்பட்டிருந்தன. பொரி, அவல், பொட்டுக் கடலை, கரும்பு, நாட்டுச் சர்க்கரை, வாழைக்கன்று, தோரணம், பூசணிக்காய், பழங்கள் போன்றவற்றை பொதுமக்கள் நேற்று ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அரியலூரில் தங்கியுள்ள வெளியூர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றதால், அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேபோல, திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் உட்பட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு ஆயுதபூஜைக்காக பொருட்களை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x