Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு - 2023-ம் ஆண்டுவரை பிஎச்டி கட்டாயமில்லை : பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்டி தகுதி 2023-ம் ஆண்டு வரை கட்டாயமில்லை என்று யுஜிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதிகள் யுஜிசி சார்பில் 2018-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்படி கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் (பிஎச்டி) கட்டாயம் என்று விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை 2021 ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இதற்கிடையே கரோனா பரவலால் இந்தாண்டு முதல் பிஎச்டிதகுதி கட்டாயம் என்ற விதிக்குவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2023-ம் ஆண்டு வரை பிஎச்டிதகுதி அவசியமில்லை. இந்த உத்தரவைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கரோனா பரவலால் பிஎச்டிபடிப்பை முடிப்பதில் பட்டதாரிகள் பலருக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலை.களில் நிலவும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய பல்கலை.களில் மட்டும் சுமார் 6,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு யுஜிசி இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து உதவி பேராசிரியர் பணிக்கு அடுத்த 2 ஆண்டு பிஎச்டி பட்டம்இல்லாமல் சேர முடியும். இந்தவாய்ப்பை பட்டதாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x