Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 2 விசைப்படகுகள் பறிமுதல் :

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன் படுத்திய 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதியில், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக வந்த புகாரின்பேரில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தலைமையில், மீன்வள ஆய்வாளர்கள் துரைராஜ், ஆனந்த், கடல் அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வள மேற்பார்வையாளர்கள் சண்முக சுந்தரம், சுரேஷ் ஆகியோர் மனோரா கடல் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் ஒரு குழுவாகவும், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து ஒரு குழுவாகவும் சென்று கடலுக்குள் ஆய்வு செய்தனர்.

அப்போது, திருநீலகண்டன், மாரிமுத்து ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள் மற்றும் உபகரணங்கள் இருந்ததை கண்டறிந்த ஆய்வுக்குழுவினர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு பிடிக்கப்பட்ட 1,050 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்து, ஏலம் விடப்பட்டு ரூ.16,800 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார் கூறியது: இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த இரு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழக்கு விசாரணை முடியும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இரு விசைப்படகுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x