Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து - கோவையில் சுற்றுச்சாலை திட்டத்தை உருவாக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

கோவை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து சுற்றுச்சாலை திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் இந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை கிளை) தலைவர் சி.பாலசுப்ரமணியன், துணைத் தலைவர்கள் பி.ராமுலு, வி.சுந்தரம், கவுரவ செயலர்கள் சி.துரைராஜ், எஸ்.நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். காரணம்பேட்டையிலிருந்து கரூர் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 81-ஐ நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை எண் 948-ஐ அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம் பகுதிகளில் மட்டும் புறவழிச்சாலையுடன் கூடிய 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

மதுக்கரை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையத்தை இணைக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் கருமத்தம்பட்டி வரை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தொழில் நகரமான கோவைக்கு சுற்றுச்சாலை என்பது முக்கியமான ஒரு தேவையாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையை 6 தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன. புதிதாக நிலம் கையகப்படுத்த தேவை இல்லாத சூழல் உள்ள நிலையில், இவற்றை இணைத்து சுற்றுச்சாலை திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மேலும், கோவையில் மத்திய அரசின் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மெகா ஜவுளிப் பூங்கா திட்டம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த விளையாட்டு மையம், வெளிமாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி வசதிகள், உள்ளூர் இணைப்பு ரயில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x