Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

திருப்பூர் நொச்சிப்பாளையம் பிரிவு சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் - போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகனஓட்டிகள் : போலீஸாரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவில் காலைமற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருப்பூர் பல்லடம் சாலை மாநகரின் பிரதான சாலையாகும். பழைய பேருந்து நிலையம், அரசு பெண்கள் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், தென்னம்பாளையம் சந்தை, உழவர் சந்தை, அரசு மருத்துவமனை என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அதேபோல இந்த சாலை, உடுமலை,பொள்ளாச்சி மற்றும் கோவை செல்பவர்களின் பிரதான சாலையாகும்.

இந்நிலையில் வீரபாண்டியை அடுத்துள்ள நொச்சிப்பாளையம் பிரிவு வழியாக தாராபுரம் சாலை,பொங்கலூர், பல்லடம், கணபதிபாளையம் என பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இப்பகுதியில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள், சாய ஆலைகள் இயங்கி வரும் நிலையில், தினசரி இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:

திருப்பூர் நகரில் இருந்து பல்லடம் சாலையில் சமீபகாலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள தேநீர் கடைக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அங்கிருப்பதால், தண்ணீரை பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல லாரிகள்அணிவகுத்து நிற்கும்.

அதேபோல இப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கூடமும்அமைந்துள்ளதால், இந்த இடத்தை கடப்பது பெரும் சவாலாக உள்ளது. மது அருந்த வருவோர், இச்சாலையின் இருபுறமும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பலமணி நேரம்காத்திருக்க வேண்டிய நிலைக்குவாகன ஓட்டிகள் தள்ளப்படுகின்றனர். நேற்று முன்தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் வாகனங்கள் அணிவகுத்துநின்றன. இதையடுத்து, நெரிசலில்சிக்கியிருந்த அரசுப் பேருந்தின்நடத்துநர் ஒருவர், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அதன்பின் போக்கு வரத்து சீரானது. இப்பகுதியில் போக்குவரத்து போலீஸாரை நியமித்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சி.கொடிசெல்வன் கூறும்போது ‘‘பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து காவலர்களை கொண்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x