Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

கோயில்களை திறக்க விதிக்கப்பட்டுள்ள - கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் போராட்டம் : வேலூர் இப்ராஹிம் தகவல்

கோவை

கோயில்களை திறக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக்கொள்ளாவிட்டால், பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மதுபான கடைகள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட நெருக்கடி மிகுந்த இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு பரவாத கரோனா, குளித்து தூய்மையாகி கடவுளை வணங்கச் செல்லும் கோயில்களில் பரவும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். மத்திய அரசை திமுகவினர் ஒன்றிய அரசு என அழைத்து வருகின்றனர்.

தேசத்துக்கு எதிரான பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளை யார் ஊக்குவித்தாலும் பாஜக அதை நெஞ்சுரத்தோடு எதிர்க்கும். பாஜக என்பது அனைவருக்குமான கட்சி. பாஜக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற பொய் பிரச்சாரத்தை திமுக, கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைப் பற்றி கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x