Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்ள - இயற்கை பேரிடர் மேலாண்மையில் தொலையுணர்வு தொழில்நுட்ப பயிற்சி : கடலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு

பேரிடர் மேலாண்மையில் தொலை யுணர்வு தொழில்நுட்ப பயிற்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொடங்கப்பட்டது.

பயிற்சியைத் தொடங்கி வைத்தமாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்ததாவது:

கடலூர் மாவட்டமானது புயல், வெள்ளம், சுனாமி, வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் அதிக பாதிப்பு அடையும் மாவட்டமாகும். பேரிடர் ஏற்படும் சமயங்களில் அதனை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் நடத்தப்படுகிறது.

3 ஆயிரத்து 678 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கடலூர் மாவட்டத்தில் 57.5 கி.மீ நீளம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலையுணர்வு மற்றும்புவிசார் தகவல்துறை நவீன தொழில்நுட்பங்களான செயற்கைக்கோள் தொலையுணர்வு தரவுகள் டிரோன் தொழில்நுட்பம் மற்றும் ஜி.ஐ.எஸ் என்றழைக்கப்படும் புவிசார் தகவல் அமைப்பு ஆகியவற்றை கொண்டு இயற்கை சீற்றங்களை சமீப காலமாக கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிர் பரப்பளவு கணக்கிடுதல், பயிரின் வளர்ச்சி நிலையை அறிதல், பயிர் மகசூல் கணக்கிடுதல், வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிதல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கணக்கிடுதல் மற்றும் புயலால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கணக்கிடுதல் போன்ற முக்கிய பணிகளை சரியான நேரத்தில் துல்லியமான தரவுகளுடன் கொடுக்க முடியும்.

குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை கொண்டு கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடந்த 2015-ம் ஆண்டு முதல் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதைக் கொண்டு இனிவரும் காலங்களில் கடலூர் மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து பகுப்பாய்ந்து அதை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் மேலாண்மை செய்வது பற்றிய பயிற்சி நடத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் அவர்களின் திறனை மேம்படுத்திட இப்பயிற்சி சிறப்பான முறையில் பயன் தரும் என்றார்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முனைவர் பழனிவேலன்,வேளாண் இணை இயக்குநர் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x