Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு - சமுத்திரகிரி ரத யாத்திரை புறப்பட்டது : பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முன்பிருந்து காளிமலைக்கு நேற்று சமுத்திரகிரி ரதயாத்திரை புறப்பட்டது. பக்தர்கள் மலர்தூவி ரதயாத்திரையை வரவேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியில் 3,500 அடி உயர மலையில் பத்துகாணி காளிமலை பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மண்டைக்காடு, கன்னியாகுமரி, கொல்லங்கோடு பகவதியம்மன் கோயிலை போன்றே காளிமலை கோயிலும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் துர்காஷ்டமி திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் கலந்துகொள்வர்.

கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு காளிமலை கோயிலில் துர்காஷ்டமி விழா பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடந்தது. அதுபோல் இந்த ஆண்டும் சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்கள் பங்கேற்புடன் துர்காஷ்டமி விழா நடைபெறுகிறது.

காளிமலை கோயிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கியது. நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு காளிமலைக்கு சமுத்திரகிரி ரதயாத்திரை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முன்பிருந்து நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு ஆனந்தசிவம் தலைமை வகித்தார். பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ், காளிமலை அறக்கட்டளை செயலாளர் வித்யாதரன், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி காளியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜாராம் காவி கொடியை ஏற்றி வைத்தார். ரதயாத்திரையை காளிமலை டிரஸ்ட் தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். ரதம் புறப்பட்டபோது கன்னியாகுமரி சன்னதி தெருவின் இருபுறமும் நின்ற பெண்கள் தீபம் ஏந்தியும், மலர்களை தூவியும் வரவேற்றனர்.

விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, இடலாக்குடி, சுசீந்திரம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, வடசேரி, பார்வதிபுரம், தக்கலை, காட்டாத்துறை, சாமியார்மடம், பம்மம், மார்த்தாண்டம், உண்ணாமலைக்கடை, ஆற்றூர், சிதறால், களியல், கடையாலுமூடு வழியாக நேற்று மாலை பத்துகாணி சிவன் கோயிலை ரதயாத்திரை அடைந்தது. முக்கிய சந்திப்புகளில் பக்தர்கள் மலர்தூவி ரத்யாத்திரைக்கு வரவேற்பு அளித்தனர். இன்று காலை பத்துகாணி சிவன் கோயிலில் இருந்து பக்தர்கள் அம்மன் பல்லக்குடன் புனிதநீர் சுமந்து காளிமலைக்கு செல்கின்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x