Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

திருப்பதி அலிபிரியில் ரூ. 15 கோடி செலவில் பசுக்கள் கோயிலை தொடங்கி வைத்த ஜெகன்மோகன் :

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அலிபிரி மலையடிவாரத்தில் ரூ. 15 கோடி செலவில் கட்டப்பட்ட பசுக்களுக்கான கோயிலை (கோ மந்திரம்) நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று 2 நாள் பயணமாக திருப்பதி வந்தார். அவரை ரேணிகுண்டா விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ.க்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான எலும்பு சிகிச்சை பிரிவு (பர்டு) மருத்துவமனையில் ரூ. 25 கோடியில் அமைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இதய நோய் சிகிச்சை சூப்பர் ஸ்பெஷாலிடி இலவச மருத்துவமனையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ரூ. 25 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த மருத்துவமனையில் 50 படுக்கைகள், 25 ஐசியூ படுக்கைகள், 3 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் இங்கு புறநோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலிபிரி மலையடிவாரத்தில் ரூ. 15 கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினரும், தமிழக திருப்பதி தேவஸ்தான கோயில்களின் தலைவருமான சேகர் ரெட்டி வழங்கிய நிதியில் மிகவும் பிரம்மாண்டமாக கோ மந்திரம் கட்டப்பட்டுள்ளது. கலை நயத்துடன் கட்டப்பட்ட இந்த பசுக்களின் கோயிலில், நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பசு இனங்கள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு வரும் பக்தர்கள் கோ பூஜை செய்யவும், கோ துலாபாரம் செய்யவும் அனுமதிக்கப்படுவர். இதனை நேற்று மாலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலில் கோ பிரதட்சணை பூஜை செய்த பின்னர் திறந்து வைத்தார். இதில் துணை முதல்வர் நாராயண சாமி, அமைச்சர் பெத்திரெட்டி ராமசந்திராரெட்டி, சேகர் ரெட்டி உட்பட தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோ மந்திரத்திற்கு வருகை புரிந்த முதல்வரை, தற்போதைய திருப்பதி தேவஸ்தான தமிழக பிரிவு கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

பட விளக்கம்

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் ரூ. 15 கோடி செலவில் கட்டப்பட்ட கோ மந்திரத்தை நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். முன்னதாக அவர் அங்கிருந்த பசுவுக்கு புற்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x