Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் : தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. சென்னையில்நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ரயில்வே திட்டங்கள் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் அளித்த மனுக்களை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், தலைமை திட்ட அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட னர். சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்) உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸை நிறுத்தி இயக்குவது, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸை நிறுத்தி இயக்குவது, டி.ஐ. சைக்கிள்ஸ் நிறுவனம் அருகே உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்துவது, 2012-ல் தொடங்கப்பட்ட ஆவடி - பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை பணிகளை விரைந்து முடிப்பது, திரிசூலம், குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப் பாதை பணிகள், தாம்பரம் ரயில் நிலையத்தில் 5, 6, 7, 8-வதுநடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பது, தாம்பரம் ரயில் நிலையத்தில் இதயநோய், சர்க்கரை நோய்களுக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இவற்றை உடனே பரிசீலித்து, நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் உறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் கோரிக்கைப்படி, மும்பை - மதுரை லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸை தூத்துக்குடி வரைநீட்டிப்பது, சென்னை - தூத்துக்குடி இடையே தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக புதிய எக்ஸ்பிரஸ் இயக்குவது, ஆழ்வார் திருநகரியில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸை நிறுத்தி இயக்குவது, திருப்பதியில் நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸை நிறுத்தி இயக்குவது ஆகியவை தொடர்பாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை யானைக்கவுனி மேம்பாலம் 2022 டிசம்பருக்குள் கட்டிமுடிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்லவபுரம் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் அமைப்பின் பிரதிநிதிகளும் கூட்டத்துக்கு வந்து, கோரிக்கை மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x