Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

பூங்கோரை பாசியால் கடல் பகுதி பச்சை நிறமாக மாறியது - பாம்பன், கீழக்கரை கடலில் இறந்து மிதந்த டால்பின்கள், மீன்கள் :

பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் பூங்கோரைப் பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. அவற்றில் டால்பின்கள் இரண்டு இறந்து மிதந்தன. இதேபோன்று கீழக்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.

ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் கீழக்கரை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கின.

கடந்த 2 நாட்களாக பாம்பன் குந்துகால் கடற்பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்த நிலையில் இரண்டு டால்பின்கள் மிதந்தன. மேலும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாம்பனிலிருந்து கீழக்கரை வரையிலான பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதாக மீன்வளம், வனம் மற்றும் மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

2019 செப்டம்பரில் மன்னார் வளைகுடா பகுதியில் 'நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்' எனப்படும் ‘பூங்கோரை' பாசிகள் பெருமளவில் படர்ந்ததால் மீன்களின் செதில்கள் அடைபட்டு சுவாசிக்க முடியாமல் திணறி பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கரை ஒதுங்கின. அப்போது பெரும்பாலும் பாறைகளில் வசிக்கக்கூடிய சிறிய வகை மீன்களே அதிகளவில் இறந்து கரை ஒதுங்கின. ஆனால், தற்போது பாலுட்டி மீனினங்களான டால்பின் மீன்களும் இறந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கீழக்கரையிலும் கடல் நீர் பச்சை நிறமாக மாறி, ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதுகுறித்து மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது:

செப்டம்பர், அக்டோபரில் அதிகளவில் உற்பத்தியாகும் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ என்ற கடற்பாசியால் கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். இறந்து கரை ஒதுங்கியமீன்களை சாப்பிடக் கூடாது. ஒருவேளைநன்றாகக் கழுவிவிட்டு, 100 சதவீதம் நன்கு வேகவைத்து சாப்பிடலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x