Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி சுந்தரராஜபுரம் மக்கள் மனு :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த மக்கள், ஊர் தலைவர் சுடலை தலைமையில் ஆட்சியர் கி.செந்தில் ராஜை சந்தித்து அளித்த மனு விவரம்:

சுந்தரராஜபுரத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. எங்கள் பகுதிக்கு வரக்கூடிய குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால், எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் இணைப்பு குழாயை மாற்றி, புதிய குழாய் அமைத்து தர வேண்டும். ஏற்கெனவே இருந்த 2 அடிபம்புகள் பழுதடைந்து விட்டன. அதனையும் சரிசெய்து தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க செயலாளர் ரெ.சுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தூத்துக்குடி அருகே உள்ள அல்லிகுளம், ராமசாமிபுரம், கீழ தட்டப்பாறை, மேல தட்டப்பாறை, உமரிகோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி பகுதிகளில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால், காட்டாற்று ஓடை மறிக்கப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் வரும் நிலை ஏற்படும். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ராமதாஸ் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை கடந்த 23 ஆண்டுகளாக சிறுவர்கள் விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் உள்ள பொது கிணற்றையும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது சில தனிநபர்கள் அந்த நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறார்கள். எனவே, அந்த இடத்தை மீட்டு, அதில் சமுதாய நலக்கூடம் கட்டித் தரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி 30-வது வார்டு அமமுக செயலாளர் காசிலிங்கம் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட விவிடி சாலையில் தினசரி விபத்துகள் நடக்கின்றன. இந்த சாலையில் ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் மிகவும் மெதுவாக தரமற்ற முறையில் நடந்து வருகிறது. விவிடி சாலைப் பணியை விரைவாக முடித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த சுமார் 50 பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனித்தனியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதேபோல் ஏரலை சேர்ந்த பச்சைபெருமாள் என்பவர் அளித்த மனுவில் வைகுண்டம் அருகேயுள்ள பராங்குசநல்லூர் கிராமம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில், சட்டவிரோதமாக ஆற்றுமணல், குறுமண், சவுடு மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகில பாரத இந்து சேனா மாநில துணைத்தலைவர் சுப்புராஜ் அளித்த மனுவில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது.சமூக இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி போட்டதற்கான சான்றுகளுடன் வரும் பக்தர்களை தசரா பெருந்திருவிழா தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x