Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

மாநகராட்சி திருமண மண்டபங்கள், அரங்கங்களுக்கான - ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடக்கம் :

சென்னை மாநகராட்சி திருமண மண்டபங்கள் மற்றும் அரங்கங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 62 திருமண மண்டபங்கள், திருமணம் அல்லாத பொது நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக 2 ஏசி அரங்கங்கள், தலா ஒரு ஏசி அல்லாத அரங்கம் மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவை பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இவற்றில் ஒரு நாள், அரை நாள் வாடகை அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இத்திருமண மண்டபங்கள் ரூ.590 முதல் ரூ.48 ஆயிரம் வரையிலான (18 சதவீத ஜிஎஸ்டி உட்பட) குறைந்த வாடகைக்கு கிடைக்கிறது. பெரும்பாலான திருமண மண்டபங்கள் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வாடகையில் கிடைக்கின்றன. நிகழ்ச்சி அரங்கங்கள் அதிகபட்சமாக ஏசி வசதியுடன் ரூ.2 லட்சத்து 53 ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகின்றன.

இவற்றை முன்பதிவு செய்யும் சேவை கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன்பு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலமாக நடைபெற்று வந்தன. இதில் அரசியல் கட்சிகள் தலையீடு, ஒருவரே முன்பதிவு செய்துகொண்டு, பின்னர் வரும் பொதுமக்களிடம் அதிக வாடகை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பது போன்ற குளறுபடிகள் நடந்து வந்தன.

இதையறிந்த அப்போதைய மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அனைத்து திருமண மண்டபங்களின் முன்பதிவையும் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மட்டும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

வாடகை மற்றும் பாதுகாப்பு கட்டணம் போன்றவற்றை பணமாக வாங்குவதற்கு பதிலாக, வரைவோலையாக வழங்க வேண்டும், திருமண அழைப்பிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தார்.

திருமண மண்டபங்கள் எந்தெந்த தேதியில் காலியாக உள்ளன என்பதை இணையதளம் மூலமாக அறிந்துகொள்ளவும் வழிவகை செய்தார். இதில் அரசியல் தலையீடு முற்றிலும் ஒழிந்தது. இதனால் மாநகராட்சி திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது கரோனா பரவல் காலம் என்பதால், ஆன்லைன் முறையில் அரசு சேவைகளை வழங்குவது அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரட்சி திருமண மண்டபங்களையும், அரங்கங்களையும் முன்பதிவு செய்யும் சேவை விரைவில் ஆன்லைன் வழியாக கிடைக்க உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாநகராட்சி தலைமையகம் வசம் இருந்த அனைத்து திருமண மண்பங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மண்டலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளன.

அதன் தொடர்ச்சியாக பொதுமக்களே ஆன்லைனில் திருமண மண்டபங்களை முன்பதிவு செய்யவும், அதிலேயே கட்டணங்களை செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முறைகேடுகளை தவிர்க்க, சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இந்த சேவை ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.

இதன்மூலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரிப்பன் மாளிகைக்கு வர வேண்டிய அவசியம் பொதுமக்களுக்கு இருக்காது. முன்பதிவுக்கு அலுவலக நேரத்துக்காக காத்திருக்காமல், 24 மணி நேரமும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். வங்கிகளுக்கு சென்று வரைவோலை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x