Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் - 700 குட்டைகள் விடுபட்டதால் 200 ஊராட்சிகள் பாதிப்பு :

திருப்பூர்

அத்திக்கடவு- அவிநாசி நிலத்தடிநீர்செறிவூட்டும் திட்டத்தில், பெருந்துறை -அன்னூர் இடையே சுமார் 700 குட்டைகள் விடுபட்டுள்ளதால், 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் மிக முக்கிய கோரிக்கையாக அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தால், 3 மாவட்டங்களை சேர்ந்த பல நூறு குளம், குட்டைகள்பயன்பெற உள்ளன.

இந்த நிலையில் இந்த திட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ஏராளமான குட்டைகள் விடுபட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டவர்களில் ஒருவரான தொரவலூர் சம்பத் இது தொடர்பாக கூறியதாவது:

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முழுவீச்சில் நடந்து வருவதை வரவேற்கிறோம். அதேபோல், பெருந்துறை-அன்னூர் வரை சுமார் 700 குட்டைகள் விடுபட்டுள்ளன. திட்டம் அறிவிக்கும்போதே, விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதன்படி விடுபட்ட குட்டைகளை கணக்கெடுக்கும் பணியை, பொதுப்பணித்துறையினர் மேற்கொண்ட னர். ஆனால் கணக்கில் சேர்க்கப் படவில்லை.

தற்போது மொத்தமாக 1044 குளம், குட்டைகள் அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் வருகிறது. ஆனால் தொரவலூர் ஊராட்சியில், ஒரு குட்டை கூட இத்திட்டத்தின் கீழ் வரவில்லை. தொரவலூர் ஊராட்சியில் 20 குட்டைகள், வள்ளிபுரம் ஊராட்சியில் 12 குட்டைகள், பெருமாநல்லூர் ஊராட்சியில் 6 குட்டைகள், மேற்குபதியில் 4 குட்டைகள், பட்டம்பாளையம் ஊராட்சியில் 5 குட்டைகள், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் 5 குட்டைகள் என மொத்தம் 52 குட்டைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதனால் நிலத்தடிநீர் தொடர்ந்து பாதிக்கும்.

தற்போது மேற்கண்ட ஊராட்சிகளில் வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டு வருவதால், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் செறிவூட்டம் பெற முடியாத சூழல் ஏற்படும். அதேபோல் கடலை, வாழை, தென்னை, சோளம், காய்கறி விவசாயம் அதிகளவில் நடப்பதால், நிலத்தடி நீரை நம்பி உள்ள ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஆகவே இந்த திட்டத்தில் விடுபடும் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து, கூட்டம் நடத்தி அடுத்த கட்டமுடிவுகளை மேற்கொள்ள உள்ளோம். 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக திட்டத்தில் விடுபட்ட 700 குட்டைகள் தொடர்பாக, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் விரைவில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுப்பணி தொடக்கம்

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டிய குளம், குட்டை மற்றும் தடுப்பணைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பல்வேறு பகுதி ஊராட்சிகளில் இருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. மொத்தமாக 350 ஊராட்சிகளுக்கு மேல், கோரிக்கைகள் வந்துள்ளன.

ஆய்வுக்கு பின்னர், விரிவான ஆய்வுக்கு அரசு அனுமதியளிக்கும். அதன்பின்னர் விரிவான மதிப்பீடு உள்ளிட்டவை தயார் செய்யப்படும். தற்போது நிறைவடைய உள்ள அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் குளம், குட்டை மற்றும் தடுப்பணைகள் உள்ளிட்ட எதையும் சேர்க்க இயலாது. தற்போது ஊராட்சி வாரியாக நடந்து வரும் ஆய்வு பணி நிறைவுற்றதும் தான், அடுத்தகட்டமாக இவற்றை திட்டத்தில் சேர்க்க முடியும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x