Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

போதைப் பொருள் வழக்கில் கைதான ஷாருக் கான் மகன் - ஆர்யன் கானுக்கு 3 நாள் போலீஸ் காவல் : மும்பை நீதிமன்றம் உத்தரவு

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்டிலியா கப்பல் நிறுவனத்தின் ‘எம்ப்ரெஸ்’ என்ற சொகுசுக் கப்பல், கடந்த சனிக்கிழமை மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலா புறப்பட்டது. இந்தப் பயணத்தில் போதைப் பொருளுடன் கேளிக்கை விருந்து நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, என்சிபி அதிகாரிகள் 20 பேர், பயணிகளைப் போல அந்த கப்பலில் பயணம் செய்தனர்.

கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் கேளிக்கை விருந்து தொடங்கியது. இதையடுத்து என்சிபி அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் சோதனை நடத்தினர். இதில் ஆடைகள், உள்ளாடைகள் மற்றும் பர்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோகைன் உள்ளிட்ட பல்வேறு வகை போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) மற் றும் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட அனைவரும் நேற்று முன்தினம் மாலை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஆர்யன் கானின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே ஆஜராகி, ‘‘ஆர்யன் கானிடம் பயணச்சீட்டு இல்லை. கப்பலில் அவருக்கு அறையோ அல்லது இருக்கையோ கிடையாது. அழைக்கப்பட்டதன் பேரில் அவர் அங்கு சென்றார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆர்யன் கான் உள்ளிட்டோரை திங்கள்கிழமை வரை என்சிபி காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆர்யன் உள்ளிட்டோர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஆர்யன் கானை அக்டோபர் 11 வரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என என்சிபி தரப்பில் கோரப்பட்டது.

‘இந்த வழக்கு சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடையது. போதைப் பொருள் பயன்படுத்தியவரை விசாரிக்காமல் அதை சப்ளை செய்தது யார், அதற்கு நிதி அளிப்பது யார் என்பதை கண்டறிய முடியாது. ஆர்யன் கானின் ‘மெசேஜ் சாட்’ உரையாடலில் குறி யீட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன. உரை யாடல் வடிவில் லிங்க்குகள் உள்ளன. இது, சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பதை காட்டுகிறது. ஆர்யன் கானின் வங்கி மற்றும் பணப் பரிமாற்றங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்’ என்று என்சிபி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் விசாரணை மிக முக்கியமானது. மேலும் மிக அவசியமானது. குற்றம் சாட்டப்பட்டவர், புலனாய்வாளர் ஆகிய இரு தரப்புக்கும் விசாரணை பலன் அளிக்கும்’’ என்றார். மேலும், ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தாமேச்சா ஆகியோரை அக்.7 வரை என்சிபி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x