Published : 02 Oct 2021 06:39 AM
Last Updated : 02 Oct 2021 06:39 AM

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் இடங்களில் நடத்த ஏற்பாடு - நாளை 4-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 4-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் இடங்களில் நாளை நடைபெறுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். துறை செயலர்ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் சாந்திமலர், துறைத் தலைவர் தேவிமீனாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: உலகமார்பக விழிப்புணர்வு மாதத்தையொட்டி, இம்மாதம் முழுவதும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் மகளிருக்கு மார்பக புற்றுநோய் விழிப்புணர் வுகள் நடத்தப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ‘மக்களைத் தேடிமருத்துவம்’ திட்டத்தின்கீழ் வீட்டிலேயே சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அனைத்துமருத்துவ முகாம்களிலும் புற்றுநோய்க்கான பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படும்.

அக்.2 அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற இருப்பதால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறாது எனமுன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாலும், சுகாதாரப் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாலும் நாளை (ஞாயிறு) 20 ஆயிரம் இடங்களில் மெகா தடுப் பூசி முகாம் நடைபெற உள்ளது.

எந்த மாதத்திலும் செலுத்தாத அளவில் செப்டம்பரில் 1 கோடியே 42 லட்சத்து 66,000 தடுப்பூசிகள் செலுத்தி வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீரிழிவும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அச்சப்பட வேண்டாம். தடுப்பூசி முகாம்களிலேயே பரிசோதனை செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x