Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

அமரீந்தர் சிங் பாஜவுக்கு உதவக் கூடாது : காங். மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் கருத்து

ஹரீஷ் ராவத்

புதுடெல்லி

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவுக்கு உதவக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் கூறினார்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலை தொடர்ந்து மாநில முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகினார். இதையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.

இந்நிலையில் அண்மையில் டெல்லி வந்த அமரீந்தர், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் பாஜகவில் இணையக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதனை அமீரிந்தர் மறுத்துள்ளார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியிலும் நீடிக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

இநிலையில் காங்கிரஸ் கட்சியால் தாம் அவமதிக்கப்பட்டதாக அமரீந்தர் கூறியிருப்பது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியால் கேப்டன் அமரீந்தர் சிங் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அமரீந்தர் ஒருவித அழுத்தத்தில் இருப்பது, அவரது சமீபத்திய பேச்சுகள் மூலம் தெரிகிறது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவக் கூடாது.

சீக்கிய மத நிந்தனை வழக்கில் குற்றவாளிகள் எவ்வளவு வலிமை மிக்கவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று 2017, பஞ்சாப் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் உறுதி அளித்தது. துரதிருஷ்டவசமாக அமரீந்தர் அரசு தரப்பு வாதங்களை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஏனென்றால் இந்த விவகாரம் சரியாக முன்வைக்கப்படவில்லை. இந்த தோல்வி எம்எல்ஏக்கள் உட்பட பலரது உணர்வுகளை புண்பட வழிவகுத்தது.

பஞ்சாப் மாநில பிரச்சினைகள் தொடர்பாக 3 உறுப்பினர் குழுவை கட்சி மேலிடம் நியமித்தது. இக்குழு பலரின் ஆலோசனைகளைப் பெற்று 18 அம்ச பரிந்துரைகளை அளித்தது. இவற்றை நிறைவேற்றுமாறு அமரீந்தரிடம் நானும் தனிப்பட்ட முறையில் கூறினேன். என்றாலும் இவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற எண்ணம் எம்எல்ஏக்கள் மத்தியில் எழுந்தது.

இவ்வாறு ஹரிஷ் ராவத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x