Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் - முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி அவரது கணவருக்கு 5 ஆண்டு சிறை : சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி. தற்போது திமுக இலக்கிய அணி செயலாளராக உள்ளார். இவர் அமைச்சராக பதவி வகித்தபோது இவரது கணவர் வழக்கறிஞர் பாபு நடத்தி வந்த வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை சார்பில் ரூ.15.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் மூலம் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என கடந்த 1997-ம் ஆண்டு சமூக நலத்துறை செயலர் லட்சுமி பிரானேஷ் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, சமூக நலத்துறை முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை முன்னாள் இயக்குநர் சண்முகம், இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையின்போது கிருபாகரன் இறந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி என்.அலிசியா நேற்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பு:

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை முன்னாள் இயக்குநர் சண்முகம் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திரகுமாரி, பாபு ஆகியோருக்கு 3 பிரிவுகளிலும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். முன்னாள் இயக்குநர் சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது. வெங்கடகிருஷ்ணன் விடுதலை செய்யப்படுகிறார்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

தீர்ப்பைக் கேட்டதும் இந்திரகுமாரி கண்ணீர் வடித்தார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் நீதிமன்றத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x