Published : 29 Sep 2021 03:19 AM
Last Updated : 29 Sep 2021 03:19 AM

மக்களின் வாழ்வுரிமையில் தலையிடக்கூடாது : பட்டாசு உற்பத்தியாளர்களிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

வேலைவாய்ப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையில் தலையிடக்கூடாது என்று பட்டாசு உற்பத்தியாளர்களை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆத்மராம் நத்கர்னி ஆஜரானார். அவர் வாதிடும்போது, "பட்டாசு உற்பத்தி துறை மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பட்டாசு தடை, கட்டுப்பாடுகளால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது" என்று தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் அர்ஜுன் கோபால் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அவர் கூறும்போது, "தடை செய்யப்பட்ட ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மும்பை, கொல்கத்தா நகரங்களில் விற்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தகைய பட்டாசு உற்பத்தி, விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனையை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பார்தி ஆஜரானார். அவர் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுகலின்படி, சுற்றுச்சூழல் நிபுணர்களின் ஆலோசனைபடி பசுமை பட்டாசுகள் உற்பத்தி தொடர்பான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான பதில் மனுவை கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்" என்று விளக்கம் அளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:

வேலைவாய்ப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையில் தலையிடக்கூடாது. எங்களைப் பொறுத்தவரை அப்பாவி மக்களின் வாழ்வுரிமைக்கு முதலிடம் அளிக்கிறோம். பசுமை பட்டாசுகளை சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஏற்றுக் கொண்டால் அது தொடர்பாக உரிய உத்தரவுகளை பிறப்பிப்போம்.

நமது நாட்டை பொறுத்தவரை சட்டங்கள், உத்தரவுகள் முறையாக அமல் செய்யப்படுவது கிடையாது. மத நிகழ்ச்சிகள், அரசியல், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. இதை காவல் துறை அதிகாரிகள் தடுப்பது இல்லை. இவ்வாறு செயல்படும் காவல் அதிகாரிகளை பொறுப்பாளிகளாக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை உத்தரவை மறுபரிசீலனை செய்து, பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலையில் 4 மணி நேரமும் மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x