Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட 10 அறிஞர்களுக்கு - ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்’ அறிவிப்பு :

ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட 10 தமிழ் அறிஞர்களுக்கு ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய செம்மொழித் தமிழாய்வுநிறுவனத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி வழங்கி,‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட் டளை’யை நிறுவினார்.

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை

அதன்படி, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’வழங்கப்படுகிறது. அதனுடன், இந்தியாவிலேயே அதிக தொகையாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கருணாநிதியின் உருவச்சிலையும் வழங்கப்படும்.

முதல்முறையாக, பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா-வுக்கு 2010-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ‘கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ 2010முதல் 2019-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட விருது தேர்வுக் குழுவினரால் 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து 10 அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொன்.கோதண்டராமன்

அதன்படி, 2010-ம் ஆண்டுக்கான விருது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள்பேராசிரியர் வீ.எஸ்.ராஜத்துக்குவழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்.கோதண்டராமன் (2011), தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (2012), புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநரும் புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான பேராசிரியர் ப. மருதநாயகம் (2013), சென்னை பல்கலை. திருக்குறள் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கு. மோகனராசு (2014) ஆகியோருக்கும்,

சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (2015),புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் கா.ராஜன் (2016), ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (2017), சென்னை புதுக் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (2018)ஆகியோருக்கும்,

தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லூரி மற்றும் நெல்லை திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கு.சிவமணி (2019) ஆகியோருக்கும் வழங்க செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 8-வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது.

மேலும் 2020, 2021, 2022-ம்ஆண்டுகளுக்கான ‘கருணாநிதிசெம்மொழித் தமிழ் விருது’களுக்கான முன்மொழிவுகளைப் பெறவிளம்பரம் வெளியிட ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்குரிய விருது,மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த விழாவில் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x